அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கட்டிடம் கட்டிய விவகாரத்தில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 26.4.2007 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார்.