அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த கர்நாடக மாநிலத்தில், 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3.27 லட்சம் கோடி மதிப்பில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறிய அறிவிப்புகளில், பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஒவ்வொரு வீட்டுக்கும் 4000 முதல் 5000 வரை நிதி உதவி, 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 10 கிலோ இலவச உணவு தானியம், பெண் குடும்பத் தலைவர்களுக்கு 2000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன. மேலும், ஆண்டுக்கு 52000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, 1.3 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சமாக, மதுபானங்கள் மீதான வரி ஏற்றம் அமைந்துள்ளது. அனைத்து மது வகைகளுக்கான வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கல்வித்துறைக்கு 37587 கோடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு 24166 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.