கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
7-வது ஊதியக் குழு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசு ஊழியர் சங்கம் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு, முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை போராட்டத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார்.
பின்னர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 7வது ஊதியக் குழு நியமிக்கப்பட்டு இடைக்கால நிவாரணமாக 17 சதவீத ஊதிய உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.