கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு சார்பில் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 100 ரூபாய் மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இந்திய ரிசர்வ் வங்கி அந்த நாணயத்தை அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாணயத்தின் ஒரு புறத்தில் கருணாநிதியின் சிரித்த முகத்துடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர்.எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924 - 2024 என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இதன் மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூபாய் 100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும் பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதன் நினைவு நாணயத்தை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொது புழக்கத்திற்கு விடப்படுமா அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.