இந்தியாவிலேயே முதல் முறையாக, கேரள மாநிலம் தனக்கான சொந்த பிராட்பேண்ட் சேவையை தொடங்கியுள்ளது. கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் - K-FON என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையை, மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கேரள அரசு, 1500 கோடி ரூபாய் மதிப்பில், 35000 கிலோமீட்டர் ஆப்டிகல் ஃபைபர் சேவையை இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளது. முதற்கட்டமாக, 30000 க்கும் மேற்பட்ட அரசு ஸ்தாபனங்களில் இந்த சேவை வழங்கப்படும்; இரண்டாம் கட்டமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “தொலைத்தொடர்பு துறை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களாலும் தனியார் நிறுவனங்களாலும் இயக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக, அதற்கு மாற்றாக, அரசாங்கமே ஏற்று நடத்தும் இணைய சேவையை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம், பொதுமக்களை தனியார் நிறுவனங்கள் சுரண்டுவது தவிர்க்கப்படும். மற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களைப் போலவே, அதிக வேகம் மற்றும் தரத்துடன் எங்கள் சேவை இருக்கும். மாதத்திற்கு 299 ரூபாயில் 20 எம்பிபிஎஸ் வேகத்தில் அடிப்படை திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக, 250 எம்பிபிஎஸ் வேகத்தில், மாதத்திற்கு 1249 ரூபாய்க்கு இணைய சேவை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மாதத்திற்கு 3000 ஜிபி வரை இலவச பதிவிறக்கங்கள் மேற்கொள்ளலாம்.” என்று கூறினார்.














