கேரளாவில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் சுமார் 2000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பொது மக்களுக்கு பயன்படும் பல்வேறு பொருட்கள் மலிவு விலைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளும் தொடங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக ரேஷன் கடைகள் அனைத்தும் கே- ஸ்டோர்கள் என மறு பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதன் முதல் கட்டமாக கே- ஸ்டோர்களாக கேரளாவில் உள்ள 108 ரேஷன் கடைகள் மாறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பின்னர் இதன் மூலம் ரூபாய் பத்தாயிரம் வரையிலான பண பரிவர்த்தனைகள்,மின்சாரம் தண்ணீர் உட்பட்ட பில்களை செலுத்துதல், சிறிய சிலிண்டர்கள் பல பொது சேவைகள் மக்களுக்கு கிடைக்கும் வழி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூபாய் 10க்கு விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன அமைப்புகள் அமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட உள்ளது. தற்போது கேரளாவில் சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் இதன் முதல் கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம் திட்டா போன்ற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த தண்ணீர் பாட்டில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் தண்ணீர் பாட்டில் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது














