இந்தியாவில் கிட்டத்தட்ட 30000 கியா காரன்ஸ் வாகனங்கள் திரும்பப் பெறப்பட உள்ளதாக கியா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கிய மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கைக்காக கார்கள் திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கியா இந்தியா நிறுவனம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 30297 MPV காரன்ஸ் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு திரும்ப பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இலவசமாகவே புதிய மென்பொருள் மேம்படுத்தல் புகுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. வாகன டீலர்கள் வாயிலாக, விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, இந்த மென்பொருள் மேம்படுத்தல் அம்சம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.