கொல்கத்தாவில் தொழில் செய்து வரும் நிறுவனத்தின் பல்வேறு வளாகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதில், சட்டவிரோதமாக சம்பாதித்த 250 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு, எரிசக்தி பரிமாற்றம், விநியோகக் கட்டமைப்புகள், ஸ்டீல் கட்டமைப்புகள், பாலிமர் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நிறுவனத்திற்குச் சொந்தமான 28 வளாகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக, பத்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் ஆகியவை கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்துதல், கணக்கில் காட்டப்படாத கட ன்கள் போன்றவற்றிற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், “முதல் கட்ட விசாரணையில் இந்த நிறுவனம் பல்வேறு துணை நிறுவனங்களின் பெயரில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. துணை நிறுவனங்களின் பெயரில் சட்டவிரோதமாகப் பணம் பெறப்பட்டுள்ளது. சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள், இணை நிறுவனங்களின் பெயரில், சட்டவிரோதமாகச் சம்பாதித்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுவரை 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்ட விசாரணையில் கூடுதல் தகவல்கள் தெரியவரும்” என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.