ட்விட்டர் தளத்தைப் போல, சமூக ஊடகச் சேவையை வழங்கும் கூ என்ற சமூக வலைத்தளம் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே நாட்களில், சுமார் 10 லட்சம் பதிவிறக்கங்களை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து, கூ செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் உட்பட 11 மொழிகளில் இயங்கி வரும் கூ செயலி, பிரேசில் நாட்டில் போர்த்துகீசிய மொழி சேர்க்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 2 நாட்களில், பிரேசில் நாட்டின் பல பிரபலங்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பேசிய கூ சமூக செயலியின் இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளின் பதிவிறக்க மதிப்பீட்டில், பிரேசில் நாட்டில், கூ செயலி முன்னணியில் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.