குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே ஏற்பட்ட மண்சரிவால் நடுவழியில் மலை ரயில் நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் அடர்லி அருகே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் அடர்லி அருகே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் வந்து மண் சரிவை அகற்றி சீரமைத்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிரமத்திற்கு உள்ளாகினர்.