சீனாவில், தற்போதைய நிலையில் ஒரே ஒரு இந்திய பத்திரிக்கையாளர் மட்டுமே உள்ளார். அவரையும் இம்மாத இறுதியில் நாட்டை விட்டு வெளியேறுமாறு சீனா தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய பத்திரிக்கை துறை, சீனாவில் இருந்து முழுவதுமாக வெளியேற உள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், 4 இந்திய பத்திரிக்கையாளர்கள் சீனாவில் இருந்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், இருவருக்கு விசா புதுப்பிப்பு மறுக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினர். மற்றொருவர் கடந்த வாரம் திரும்பி உள்ளார். இந்நிலையில், இம்மாத இறுதியில் எஞ்சியுள்ள ஒருவரும் நாடு திரும்ப உள்ளார்.
அதே வேளையில், இந்தியாவில் ஒரே ஒரு சீன பத்திரிக்கையாளர் மட்டுமே தங்கி உள்ளார். அவருக்கும் விசா புதுப்பிப்பு மறுக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதில் குறைபாடுகள் உள்ளதாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைகள் மேலும் பதற்றத்தை உருவாக்குகின்றன.














