சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையில் மாநகர, மாவட்ட அளவில் சமூக ஊடக குழு என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அவதூறு, வதந்தி பரப்புவதும், தனிநபர் தாக்குதல்கள் நடத்துவதும் சமீபகாலமாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கிலும் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யூடியூப், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை விரைந்து கண்டுபிடிப்பதும் அவசியமாகிறது. அதற்காக, சென்னை உட்பட 9 மாநகரங்கள், 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள், காவலர்களைக் கொண்ட சமூகஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில் கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர். சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இக்குழு இயங்கும்.
இதன் மூலம், சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் விஷமிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அத்தகைய தவறான பதிவுகளை நீக்குவது, அவர்களது சமூகஊடகக் கணக்குகளை முடக்குவது, கணினிசார் குற்ற வழக்குகள் பதிவு செய்வது ஆகிய பணிகளை இக்குழு விரைந்து செயலாற்றும். மேலும் சாதி, மத, அரசியல் மோதல்களை தடுத்து சட்டம் -ஒழுங்கை பராமரிக்க இக்குழு உதவும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.