பாட்னாவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ராகுல், சரத்பவார், மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.
மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் இன்று கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு-வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும் சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.