எல்.ஐ.சி நிறுவனத்தின் மூலதன மதிப்பின் மூன்றில் ஒரு பங்கை நிறுவனம் இழந்துள்ளது.
எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழாக சரிந்தது. எல்.ஐ.சி ஊழியர்கள் பாலிசிதாரர்கள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி எல்.ஐ.சி. நடப்பாண்டு மே மாதம் 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட நாள் முதல் பங்குசந்தையில் எல்.ஐ.சி.யின் பங்குகள் சரிவை மட்டுமே கண்டு வருகின்றன.
ஆரம்பத்தில் 949 ரூபாயாக இருந்த எல்.ஐ.சி.யின் பங்கு ஒன்றின் விலை தற்போது 629 ரூபாயாக வீழ்ந்துள்ளது. சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மூலதன மதிப்பில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி. மூன்றில் ஒரு பங்கு மூலதன மதிப்பை இழந்து இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பட்டியலிடப்பட்ட போது பங்குச்சந்தையில் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் இருந்த எல்.ஐ.சி. தற்போது 14-வது இடத்திற்கு தள்ளப்பட்டு பெரும் பின்னடைவை கண்டுள்ளது.