கேரளாவில் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கும் வாகன ஓட்டுநர் பள்ளிகளை கேரள முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் மாநில அளவிலான திட்டமாக ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை தொடங்கி வைத்துள்ளார். இது தனியார் பயிற்சிகளை காட்டிலும் நியாயமான கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இலகுரக மோட்டார் வாகனம் மற்றும் கனரக மோட்டார் வாகன உரிமம் பெற ஆர்வமுள்ளவர்கள் தலா ரூபாய் 9000, இருசக்கர வாகன பயிற்சி ரூபாய் 3500 க்கும் பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கார் மற்றும் இருசக்கர வாகன பயிற்சி ஆகிய இரண்டையும் கற்றுக் கொள்வதற்கு ரூபாய் 13 ஆயிரத்துக்கு பயிற்சி பெறும் வகையில் காம்போ கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் பயிற்சி பள்ளிகளை ஒப்பிடும்பொழுது 40 சதவீதம் வரை தள்ளுபடியை அரசு வழங்குகிறது. மேலும் மாநிலம் முழுவதும் ஓட்டுநர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் இந்த பள்ளிகள் மூலம் தரப்படுத்தப்பட்ட பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது














