லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், 10000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது, வரும் செப்டம்பர் 12ஆம் தேதி, பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அண்மையில், பங்குகளை திரும்ப பெறுவது குறித்து, பங்குதாரர்களின் ஒப்புதலை லார்சன் அண்ட் டூப்ரோ பெற்றது. தற்போது, இந்த நடவடிக்கையில் எந்தெந்த பங்குதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3.3 கோடி பங்குகள் பங்குதாரர்களிடம் இருந்து பெறப்படும் என எல் அண்ட் டி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, ஒரு பங்கு 3000 ரூபாய்க்கு பெறப்படும் எனவும் கூறியுள்ளது. இது சந்தை விலையை விட 17% கூடுதல் பிரீமியம் ஆகும். மேலும், எல் அண்ட் டி நிறுவனம், முதல் முறையாக பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது என்பதால், இது முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.