ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் விமானிகள், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இன்று 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக, சுமார் 700 பயணிகள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.
லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகள், சம்பள உயர்வு கோரி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து பிராங்க்ஃபுர்ட் மற்றும் முனிச் நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 2 லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்தானதால், 700 பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர். இன்று அதிகாலை 12:15 மணி அளவில், விமான நிலையத்தின் ஒன்றாம் எண் கதவருகில் பொதுமக்கள் கூடினர். சுமார் 150 பேர் அவ்விடத்தில் கூடியதால், அங்கு சில நிமிடங்களுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. விரைந்து வந்த விமான நிலைய காவல்துறையினர், அவர்களை விசாரித்ததில், கூடியிருந்தவர்கள் விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று தெரியவந்தது. “எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கோபமடைந்தனர். தங்களது பயணக் கட்டணத்தை திருப்பித் தருமாறும், பயணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யும்படியும் கோரி, விமான நிலைய அதிகாரிகளுடன் சச்சரவில் ஈடுபட்டனர். லுஃப்தான்சா நிறுவனத்தின் சார்பில், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என்ற உறுதியான செய்தி கிடைத்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்” என்று விமான நிலைய காவல்துறை உயர் அதிகாரி தனு ஷர்மா கூறினார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவியது. அதன் மூலம்,. ஏராளமான மாணவர்கள் இன்றைய விமானத்தில் பயணிக்க இருப்பது தெரியவந்தது. இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, டெல்லியில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், உலகெங்கும் இன்று மொத்தம் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 130000 பயணிகள் பாதிப்படைந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானிகள், 5.5% ஊதிய உயர்வு கேட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்றைய வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














