ரூ.33 கோடியில் கட்டப்படும் பொருநை அருங்காட்சியகத்திற்கு மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதையடுத்து நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மொத்தம் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு மொத்தம் 13 ஏக்கர் பரப்பளவு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கொற்கை அகழாய்வில் கிடைத்த 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் கிடைத்த 1,620 பொருட்கள், சிவகளையில் கிடைத்த 185 பொருட்கள் என 2,617 பொருட்கள், 106 முதுமக்கள் தாழிகள் ஆகியவை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தும் வகையில் வைக்கப்பட உள்ளது.