மதுரையில் 2024 ஆம் ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர் கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பம் ஆனது. இதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் 19ஆம் தேதி பட்டாபிஷேகமும், 20ம் தேதி திக்விஜயமும், 21ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. மேலும் நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவிற்காக அழகர் மலையிலிருந்து கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரையை நோக்கி புறப்பட்டார். அதனை அடுத்து கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி மதுரையை அடுத்த மூன்று மாவடியில் நடைபெற்றது. பின்னர் இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் எழுந்தருளினார்.