மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் கிளிகள் வளர்க்க மாவட்டத்தின் வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், ஏற்கனவே கிளிகளை வளர்ப்பவர்கள், ஜூலை 17 ஆம் தேதிக்குள் கிளிகளை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அலுவலகத்தில் கிளிகளை ஒப்படைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்த சட்டம் 2022 படி, பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக கிளி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை வீடுகளில் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்நிலையில், செல்லூர் மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில், நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அவற்றின் உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. மேலும், பல்வேறு கிளிகளை அதன் உரிமையாளர்கள் காயப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்படுகிறது. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.