மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 10 நாட்கள் கோலாகலமாக சித்திரை திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவானது கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து நாள்தோறும் காலை மற்றும் இரவு வேலைகளில் சுவாமி அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்த வண்ணம் உள்ளனர். இந்நிகழ்வில் எட்டாம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை மீனாட்சி ஏற்கும் வகையில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாளை மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் உள்ள கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் வசதிக்காக குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ள அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தை நேரடியாக காண 12000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பின்னர் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருக்கல்யாணத்திற்கான விருந்து வழங்கப்படுகிறது.