மஹிந்திரா நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 64486 ஆக உயர்ந்துள்ளது. இதுவே, மஹிந்திரா நிறுவனத்தின் மாதாந்திர வாகன விற்பனையில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். குறிப்பாக, எஸ்யூவி ரக வாகனங்கள் விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் இந்த நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 28112 ஆக இருந்தது. இதில் எஸ்யூவி ரக வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே 12863 ஆகும். இந்நிலையில், 2022 செப்டம்பர் மாதத்தில், எஸ்யூவி ரக வாகனங்கள் விற்பனை 34262 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவின் தலைவர் வீஜே நாக்ரா, "கொரோனா பரவலின் போது, வாகன விற்பனையில் பரவலாக தொய்வு நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் கூட எஸ்யூவி ரக வாகனங்கள் விற்பனையில் ஒற்றை இலக்க வளர்ச்சி தென்பட்டது. அது கடந்த வருடத்தில் மேலும் உயர்ந்தது. இந்த வருடத்தில், எஸ்யூவி ரக வாகன விற்பனையில் 40% வளர்ச்சி பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் விற்பனையில் எஸ்யூவி ரக வாகனங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக, Scorpio N, XUV 700, Thar, Bolero Neo போன்ற வாகனங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன" என்று கூறினார்.
மேலும், இந்த வருடத்தில், இதுவரை 2.6 லட்சம் வாகன முன்பதிவுகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல மாதங்களாகவே, வாகனங்களின் தேவைக்கும், எஸ்யூவி ரக வாகன உற்பத்திக்கும் இடையில் நிறைய இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனைக் களைவதற்கு நிறுவனம் தீவிரமாகச் செயல்படும் என்று நாக்ரா உறுதியளித்துள்ளார்.