மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ எண் ரக கார் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. வறண்ட பாலைவனத்தை 13 மணி நேரத்தில் அதி வேகமாக கடந்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுமார் 385 கிலோ மீட்டர் தூரத்தை, 50 டிகிரி செல்சியஸ் உச்சபட்ச வெப்பநிலையை தாங்கி, ஸ்கார்பியோ என் ரக கார் கடந்துள்ளது. அதன் பாதையில் 1100 மணல் குன்றுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ என் கார் முழுவதுமாக ‘மேட் இன் இந்தியா’ கார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் வாகன தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் துறை தலைவர் வேலுச்சாமி, “எங்கள் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் செயல்திறன் சார்ந்த அம்சங்களை இந்த சாதனை நிரூபித்துள்ளது. மேலும், எங்கள் பொறியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த சாதனையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.