கேரளாவைச் சேர்ந்த மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனம், Ma-Money என்ற பெயரில் புதிய கடன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் வழியில் வாடிக்கையாளர்சேவையை வழங்க இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் அனைத்து நிதி சேவைகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக இந்த செயலி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் இந்த டிஜிட்டல் செயலி மூலம், தங்க நகை கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தட்டு நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்து இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தொடங்கி வைத்து பேசிய மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வி பி நந்தகுமார், “இந்த செயலி மூலம், வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் நிறுவனத்தின் சேவைகளை பெற முடியும். வாடிக்கையாளர் வசதிக்காக, புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து எங்கள் நிறுவனம் முன்னிலையில் உள்ளது” என்று கூறினார்.