பார்தி நிறுவனத்தை சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்திற்கு, 36 செயற்கைக் கோள்களை செலுத்த இஸ்ரோ ஒப்பந்தமிட்டிருந்தது. தற்போது, இந்த செயற்கைக்கோள்கள் வரும் மார்ச் 26 ஆம் தேதி செலுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பூமியிலிருந்து குறைந்த உயரத்தில் சுற்றும் வண்ணம், ஒன் வெப் நிறுவனத்தின் செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 36 செயற்கை கோள்களை நிறுவினால், தனது முதல் செயற்கைக்கோள் கூட்டமைப்பை இந்த நிறுவனம் நிறைவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது நிறுவனத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய மைல்கல் ஆகவும், பிரிட்டன் மற்றும் இந்தியா இடையிலான உறவின் அடையாளமாகவும் சொல்லப்படுகிறது.
இஸ்ரோவின் இலகு ரக ராக்கெட்டான GSLV-Mk3 / LVM3 மூலம், மார்ச் 26 காலை 9 மணிக்கு செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. ஏற்கனவே, கடந்த வாரம், ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் 40 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஒன் வெப் நிறுவனம், இத்துடன் 582 செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதையில் நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.