இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து 7 அமர்வுகளாக ஏறுமுகத்தில் இருந்து, இன்று உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 63000 புள்ளிகளை முதல் முறையாக கடந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளும், 418 புள்ளிகள் அல்லது 0.67% உயர்ந்து, 63099 புள்ளிகளில் நிலைக்கொண்டன. இது இந்திய பங்குச் சந்தை நிலவரத்தில் வரலாற்று உச்சம் ஆகும்.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண்ணும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில், நிஃப்டி குறியீட்டு எண் 140 புள்ளிகள் அல்லது 0.99% உயர்ந்து, 18758 புள்ளிகளாக நிலை கொண்டது. இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டின.














