செவ்வாய் கிரக ஆய்வுக்காக, பல்வேறு நாட்டினர் அந்த கிரகத்தில் ரோவர்களை அனுப்பி, புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், முதல் முறையாக, ஐரோப்பிய விண்வெளி மையம், தனது யூடியூப் தளத்தில், செவ்வாய் கிரகத்தில் இருந்து நேரலை ஒளிபரப்பு செய்ய உள்ளது.
இன்று, சர்வதேச நேரப்படி மாலை 6:00 மணிக்கு, ஒரு மணி நேர நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த ஒளிபரப்பு நிகழ்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு 50 வினாடிக்கும், செவ்வாய் கிரகத்தில் நேரடியாக எடுக்கப்படும் புகைப்படம் வெளியாகும் படி, வீடியோ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நேரடி ஒளிபரப்பு தொடங்க, ஆரம்பத்தில் 17 நிமிடங்கள் ஆகும் என்று விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்திலிருந்து நேரடியாக பூமிக்கு புகைப்படங்கள் பரிமாற்றப்பட இருப்பதால், இந்த கால அவகாசம் தேவை என கூறியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள், விண்வெளி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் வெளியிடப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் செவ்வாய் கிரகத் திட்டத்தின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.