செவ்வாய் கிரகம் இயல்பான வேகத்தை விட அதிக வேகத்துடன் சுழல்வதாக நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் இன்சைட் லேண்டர், செவ்வாய் கிரகம் வேகமாக சுற்றி வருவதை உறுதி செய்துள்ளது. அதிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகள் மூலம் நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரி ஆராய்ச்சியாளர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை நேச்சர் ஆய்விதழில் வெளிவந்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் சுமார் 4 மில்லி ஆர்க் செகண்ட் அளவிற்கு செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது. எனவே, செவ்வாய் கிரகத்தின் பகல் பொழுது, ஆண்டுக்கு ஒரு மில்லி செகண்ட் பின்னம் அளவிற்கு குறைந்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் துருவப் பகுதிகளில் அதிக பனிக்கட்டிகள் குவிந்து வருவதால் அதன் சுழற்சி வேகம் அதிகரித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனினும், செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரித்ததற்கான நிலையான மற்றும் உறுதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.














