இந்தியாவின் வாகன டீலர்கள் சம்மேளனம், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாருதி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தங்கள் சந்தை மதிப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா, ரெணால்ட், எம் ஜி மோட்டார்ஸ், நிசான் ஆகிய நிறுவனங்களும் சந்தை இழப்பை பதிவு செய்துள்ளன.அதே வேளையில், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் கியா ஆகிய வாகன நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, டொயோட்டா, ஸ்கோடா நிறுவனங்களும் உயர்வைப் பதிவு செய்துள்ளன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் சில்லறை வணிகம் 41.4% சரிந்து, 118892 எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் சில்லறை வணிகம் 13.62% சரிந்து, 39106 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் சில்லறை வணிகம் 38965 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 13.57% உயர்ந்துள்ளது. அதேபோலவே, மஹிந்திரா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10.22% உயர்ந்துள்ளது. மேலும், அதன் வாகன விற்பனை எண்ணிக்கை 29356 ஆக பதிவாகியுள்ளது.கியா நிறுவனத்தின் சில்லறை வணிகம் 19554 எண்ணிக்கையில் பதிவாகி உள்ளதுடன், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6.81% உயர்ந்து பதிவாகியுள்ளது.














