மாருதி சுசுகி நிறுவனம் தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 43% உயர்ந்து, 2624 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 20% உயர்ந்து, 32048 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. காலாண்டு அடிப்படையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 47% உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், அறிக்கையில் உள்ள தகவல்கள் படி, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 90 ரூபாய் டிவிடெண்ட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திப்பில், ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ஒரு மில்லியன் வாகனங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலாண்டில், மாருதி சுசுகியின் மொத்த வாகன விற்பனை 514927 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.3% உயர்வாகும். குறிப்பாக, உள்நாட்டு உற்பத்தியில் 7.1% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், ஏற்றுமதியில் சற்று சரிவு காணப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.