மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜனவரி மாத வாகன விற்பனை 12% உயர்ந்து, 172535 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 155142 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14% உயர்வாகும்.
இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவத்சவா, “டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதால், நிறுவனத்தில் வாகன இருப்பு குறைந்தது. இதனால் வாகன விநியோகத்தில் சற்று சரிவு காணப்பட்டது. அதே வேளையில், டிமாண்ட் அதிகரித்து வந்தது. எனினும், வாகன விற்பனையில் உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
ஆல்டோ, எஸ்பிரசோ போன்ற சிறிய கார்கள் விற்பனை 25446 ஆக பதிவாகியுள்ளது. பலேனோ, செலிரியோ, டிசையர், இக்நீஸ், ஷிப்ட், வேகன் ஆர், டூர் எஸ் போன்ற நடுத்தர வாகன விற்பனை 73840 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மேலும், ப்ரீசா, எர்டிகா, எஸ் கிராஸ், எக்ஸ் எல் 6 ஆகிய பெரிய வாகனங்களின் விற்பனை 35353 ஆக பதிவாகியுள்ளது.