பிரிட்டனில் உள்ள யோர்க்க்ஷயர் மாகாணத்தில், சுமார் 3.3 அடி நீளம் உடைய கால் தடம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, விலங்குகளை உண்ணும் டைனோசர் உடையதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது, பிரிட்டனில் ‘டைனோசர் கோஸ்ட்’ என்று அறியப்படும் நகரில் வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசரின் கால்தடம் என்ற நோக்கில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்தப் பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் கால் தடங்களில், இதுவே மிகப்பெரியதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, இதனை ரோட்டுண்டா நகரின் மியூசியமில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த கால் தடம், கடந்த 2021 ஏப்ரல் மாதம் மேரி வுட்ஸ் என்ற உள்ளூர் ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தான் கண்டறிந்த தொல்பொருள் குறித்து மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானியிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், டைனோசர் குறித்த விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் லோமேக்ஸ் என்ற விஞ்ஞானி இதனை ஆராய்ந்துள்ளார். அவரது கணிப்பு படி, இது மெகலோசரஸ் வகையைப் போன்ற ராட்சச டைனோசர் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இங்கு கிடைத்துள்ள கால் தடத்தின் படி, அதன் நகங்கள் பூமியில் ஆழமாக பதிந்துள்ளன. எனவே, இது உட்கார்ந்த நிலையில் எழுந்திருக்க முற்பட்டபோது ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த கால் தடம், அந்த பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.