ஹவாய் தீவுப் பகுதியில் அமைந்துள்ள மாவுய் தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு கடுமையான சேதங்களை விளைவித்துள்ளது. பேரிடராக அறிவிக்கப்பட்ட இந்த காட்டுத் தீயின் போது, பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தும் முறையான எச்சரிக்கை ஓசை விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருவேளை எச்சரிக்கை சரியான நேரத்தில் விடுக்கப்பட்டிருந்தால், உயிர் சேதங்களை தவிர்த்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில், நடந்த அசம்பாவிதங்களுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
ஆனால், மாவுய் அவசர மேலாண்மை தலைவர் ஹெர்மன் அண்டயா, எச்சரிக்கை மணி ஒலிக்க விடாததில் தவறு இல்லை என்பது போல கூறி வந்தார். ஹெர்மன் அண்டையா கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து, மறுநாளே அவர் பதவி விலகியுள்ளார். அவர் உடல் நல சிக்கல் காரணமாக பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், உடனடியாக அவரது பதவி விலகல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














