தமிழகத்தின் வரலாற்றை கல்வெட்டியல், நாணயவியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் கட்டமைத்து, ஒழுங்குபடுத்தியதில் மயிலை. சீனி வேங்கடசாமி முதன்மையானவர் ஆவார். சென்னை மயிலாப்பூரில் 1900ம் ஆண்டு ஒரு சித்த மருத்துவருக்கு மகனாகப் பிறந்த இவர், இளம் வயது முதலே தனது அண்ணனான தமிழறிஞர் கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின்னாட்களில் மகாவித்வான் சண்முகம்பிள்ளை, பண்டிதர் சற்குணர் ஆகியோரிடம் தமிழை நன்கு கற்றுத் தேர்ந்தார். மயிலாப்பூர் புனித சாந்தோம் உயர்நிலைப் பள்ளி மற்றும் சென்னை கலைக் கல்லூரியில் படித்த அவர் ஓவியக் கலையில் இருந்த ஆர்வத்தால், கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு, எழும்பூர் ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியப் பயிற்சி பெற்றார். பின்னர் சாந்தோம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கினார். அக்காலகட்டத்தில் தனது பணிகளின் இடையே தமிழ் மற்றும் தமிழகம் பற்றிய ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவரது ஆராய்ச்சிகள் தமிழகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை உலகறியச் செய்தது. அவரது ஆராய்ச்சிகள் மூலமாகச் சிலத் தகவல்கள் இங்கே:
களப்பிரர் கால ஆய்வுகள்:
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலமாக அறியப்படும் கி.பி. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி.9ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் தமிழ் நிலப்பகுதியை ஆட்சிபுரிந்த மன்னர்கள் பற்றிய ஆய்வுகளில் மயிலை. சீனி வேங்கடசாமி தீவிரமாக ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று, கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை ஆய்வு செய்து களப்பிரர் கால வரலாற்றை ஆதாரங்களுடன் நிறுவினார். அவற்றுள் சில:
- பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறைக் கல்வெட்டுகளையும் படித்தறிந்து ஆராயும் திறன் பெற்றிருந்த அவர், பிராமி எழுத்து வருவதற்கு முன்பே தமிழ் எழுத்து வழக்கில் இருந்ததைச் சான்றுகளுடன் நிறுவினார். மேலும், தமிழ் பிராமி (தமிழி) எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து வடிவம் பெற்றது களப்பிரர் காலத்தில் நிகழ்ந்ததே என்பதைத் தனது ஆய்வுகளின் மூலம் அறிந்துணர்ந்தார். இந்த வட்டெழுத்து வடிவம் தான் இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்து வடிவத்திற்கு அடிப்படையாகும். இவ்வாறு தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தின் வரலாற்றை முதன் முறையாக சான்றுகளோடு உலகிற்கு எடுத்துரைத்தார்.
- திருக்குறள், கார்நாற்பது, களவழி நாற்பது, திரிகடுகம், ஏலாதி, இனியவை நாற்பது, சீவக சிந்தாமணி, முதுமொழிக்காஞ்சி, விளக்கத்தார் கூத்து, நரிவிருத்தம், எலிவிருத்தம், முத்தொள்ளாயிரம் போன்ற இலக்கியங்களும், அபிநயம், நத்தத்தம், பல்காயம், பல்காப்பியம், காக்கைப் பாடிணியம் போன்ற இலக்கண நூல்களும் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவை என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் உறுதி செய்து, தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய வரலாற்றை அறிவதற்கும் பேருதவி செய்தார். மேலும், முன்னர் இருந்த வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பா வகைகள் தாழிசை, விருத்தம், துறை என்று விரிவுபெற்றதும் களப்பிரர் காலத்தில் தான் என்பதையும் விளக்கினார்.
- கி.பி. 2ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் இருந்த தாராதேவி ஆலயம்தான் இப்போது காஞ்சி காமாட்சியம்மன் கோயிலாக உள்ளது என்பதையும் அந்த பௌத்த ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மணிமேகலையின் உருவச்சிலை இன்று அன்னபூரணி என்ற பெயரில் இந்து தெய்வமாக மாற்றப்பட்டு விட்டது என்பதையும் சான்றுகளோடு கூறி களப்பிரர் ஆட்சியின் நிகழ்வுகள் அழிக்கப்பட்ட வரலாற்றை உறுதி செய்தார். மேலும், அன்றைய மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி ஆகிய பௌத்த சிறு தெய்வங்கள், இன்று காளி, பிடாரி, திரௌபதி அம்மன் ஆகிய பெயர்களில் இந்து தெய்வங்களாக உள்ளன என்பதையும் தன் ஆய்வுகள் மூலம் பதிவு செய்தார்.
- 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் நிலை, பல்வேறு நிலப்பகுதிகளை ஆண்ட மன்னர்கள், கலாச்சாரம் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஆராய்ந்தறிந்து ‘துளுநாட்டு வரலாறு’, ‘கொங்குநாட்டு வரலாறு’ உள்ளிட்ட நூல்களை எழுதினார். மேலும், தனது ஆய்வுகள் மூலம் அறிந்த கருத்துகளை ‘மகேந்திரவர்மன்’, ‘கவுதம புத்தர்’, ‘புத்தர் ஜாதகக் கதைகள்’, ‘வாதாபிகொண்ட நரசிம்மவர்மன்’, ‘இறைவன் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்கள்’, ‘சமயங்கள் வளர்த்த தமிழ்’ உள்ளிட்ட 33 நூல்களில் கூறியுள்ளார்.
- களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர் காலம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டப் பாறைக் கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் கட்டிடக் கலையின் தன்மைகளைத் தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் நாணயவியலின் அடிப்படையில் களப்பணிகள் மூலம் ஆய்வு செய்து, தமிழகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை ஆதாரங்களுடன் பதிவு செய்தார்.
இவ்வாறு, கள ஆய்வில் தான் கண்டறிந்த உண்மைகளை, ‘திராவிடன்’ ‘குடியரசு’, ‘ஊழியன்’, ‘செந்தமிழ்’, ‘ஆனந்தபோதினி’, ‘ஈழகேசரி’ உள்ளிட்ட இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் எழுதி தமிழகத்தின் வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார். மேலும், 1963-64 ஆண்டுகளில், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று அரிய பல ஆய்வு நூல்கள் வெளிவர உதவினார்.
இவ்வாறு தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் ஒருவரான இவரைப் பற்றி,
“தமிழையே வணிக மாக்கி
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்ப தற்கு
தலைமுறை தலைமு றைக்கும்
தமிழ்முத லாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்சீ னிவேங்க டத்தின்
கால்தூ சும்பெறா றென்பேன்!”
- என்று போற்றிப் பாடுகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள். இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1981ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் மறைந்தார். அதன் பின்னர், 2000 ஆம் ஆண்டு, தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி, அவரை நம் மத்தியில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழரின் வரலாற்றை அறிவதற்கு மயிலை. சீனி வேங்கடசாமியாரின் ஆராய்ச்சிகளே பெரிதும் துணை நிற்கின்றன என்றால் மிகையாகாது.