மெட்லி மருந்து நிறுவனத்தைக் கையகப்படுத்தும் தொழில்முறை போட்டியில், சிப்லா, ஜேபி கெமிக்கல்ஸ் மற்றும் டோரண்ட் ஆகிய நிறுவனங்கள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. சுமார் 4500 கோடி ரூபாய் மதிப்பில் அந்த நிறுவனம் கையகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மும்பையில் செயல்பட்டு வரும் மெட்லி என்ற மருந்து நிறுவனம், இந்தியாவின் முதல் 40 மருந்து நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பல்வேறு மருந்து தயாரிப்புகளில், இரும்புச் சத்து சார்ந்த ஊட்டச்சத்து டானிக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக, ஆர்பி டோன் மற்றும் ஓ2 ஆகிய இரண்டு டானிக்குகள், இந்தியாவில் வாங்கப்படும் முக்கிய 300 மருந்துகள் பட்டியலில் இடம் பெறுபவை ஆகும். இரத்த சோகைக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஆர்பி டோன் இரண்டாம் இடத்திலும், வயிற்றுப் போக்கிற்கு எதிரான மருந்துகளில் ஓ2 முதல் இடத்திலும் உள்ளது. இந்த மருந்து நிறுவனத்தில் 3000 பேர் பணி செய்கின்றனர். அவர்களுள் 2200 பேர் விற்பனை துறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தின் வருவாய், 2022 ஆம் ஆண்டில், 16% உயர்ந்து, 926 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இது 800 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன. முதல் கட்டமாக நடந்த ஏலத்தில், ஆறு நிறுவனங்கள் பங்கேற்றன. ஏலத்தில் 2-3 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற போதும், மருந்து துறை சார்ந்த நிறுவனங்கள், 4500 கோடி ரூபாய் வரை, அதிக தொகை கொடுத்து, நிறுவனத்தைப் பெற முன் வந்ததால், தற்போது இறுதி கட்டத்தில், சிப்லா, ஜேபி கெமிக்கல்ஸ் மற்றும் டோரண்ட் ஆகிய 3 நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக, சிப்லா நிறுவனம், மெட்லி நிறுவனத்தை கையகப்படுத்த, அதிக முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.