3.26 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியில் நிகழ்ந்த ஒரு விண்கல் நிகழ்வு, உயிரின் தோற்றத்திற்கு வித்திட்டிருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. PNAS என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, எவரெஸ்ட் சிகரத்தை விட நான்கு மடங்கு பெரிய S2 என்ற விண்கல் பூமியின் கடல்களைத் தாக்கியது. இந்த தாக்கம் காரணமாக கடலில் பேரலைகள் எழுந்து, நீர் கொதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பார்பர்டன் கிரீன்ஸ்டோன் பெல்ட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், விஞ்ஞானிகள் இந்த நிகழ்வின் தாக்கத்தை ஆய்வு செய்தனர். இங்கு இருந்து சேகரிக்கப்பட்ட பாறைகளை ஆய்வு செய்ததில், விண்கல் தாக்கத்தால் இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் கடலில் கலந்து, உயிரினங்கள் தோன்றுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் நட்ஜா டிராபன், இந்த விண்கல் தாக்கம் அழிவை ஏற்படுத்தியிருந்தாலும், இதுவே பூமியில் உயிரினங்கள் பெருகி வளர காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.