மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் அஜித் மோகன், தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவின் துணைத் தலைவர் நிக்கோலா மெண்டல்சொன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அஜித் மோகன் மற்றொரு வாய்ப்புக்காக மெட்டா நிறுவனத்தில் இருந்து வெளியேற உள்ளார். கடந்த 4 வருடங்களாக, மெட்டா நிறுவனத்தின் இந்தியச் செயல்பாடுகளை ஒழுங்குமுறை படுத்தியதில், அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் ஆற்றிய பணி மூலம், இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை எங்கள் நிறுவனம் சென்றடைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய மெண்டல்சொன், “அஜித் மோகன் தலைமையில் எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தது. அதற்காக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எங்களது போட்டி நிறுவனமான Snap Inc நிறுவனத்தில் பணி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய உறுதியான தகவல் இல்லை” என்று கூறியுள்ளார்.
அஜித் மோகன் தலைமையில் மெட்டா நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. குறிப்பாக, நிறுவனத்தின் கொள்கைகளை மீறி, ஆளும் பாஜக அரசுக்கு உகந்த வகையில் நிறுவனம் செயல்படுவதாக சர்ச்சை எழுந்தது. அதன் பொருட்டு, அங்கீ தாஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். தற்போது, அஜித் மோகன் வெளியேற உள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, மெட்டா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். முன்னதாக, அவர் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.