ட்விட்டர் நிறுவனத்தைப் போலவே, மெட்டா நிறுவனமும் கட்டண அடிப்படையில் ‘ப்ளூ பேட்ச்’ சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மெட்டா வெரிஃபைடு’ என்ற பெயரில் இந்த சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, பயனாளர்களின் அரசாங்க அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு ‘ப்ளூ பேட்ச்’ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு இணைந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, வரும் வாரத்தில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதிகளில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. விரைவில் பிற உலக நாடுகளில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் 11.99 டாலர்களில் தொடங்குகிறது. கணினி வழியான இணையத்தில் இந்த சேவையைப் பெறுவதற்கு, மாதம் 11.99 டாலர்களும், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் இந்த சேவையைப் பெறுவதற்கு, மாதம் 14.99 டாலர்களும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகத் துறையில், ஸ்னாப்சாட், டெலிகிராம் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கட்டண சந்தா முறையை செயல்படுத்தியுள்ள நிலையில், மெட்டா நிறுவனமும் இதில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.