போலி கணக்குகள் சிக்கலை தீர்க்க, ட்விட்டரை போலவே மெட்டா நிறுவனமும் ப்ளூ பேட்ச் அம்சத்தை வெளியிட உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னால் அறிவித்திருந்தது. அதன்படி, அமெரிக்காவில், தற்போது, கட்டண அடிப்படையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ப்ளூ பேட்ச் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் ப்ளூ பேட்ச் வெளியிடப்பட்டது. மாதத்திற்கு 11.99 டாலர்கள் முதல் சந்தா கட்டணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து, “அமெரிக்காவில், சோதனை அடிப்படையில் ப்ளூ பேட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது வெளியிடப்படும்” என்று மார்க் ஜுக்கர்பர்க் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த ப்ளூ பேட்ச் அம்சத்தை பெற, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது அரசாங்க அடையாள அட்டையை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். அரசாங்க அடையாள அட்டையில் உள்ள படி, அவர்களது ப்ரொபைல் பிக்சர் இருக்க வேண்டும்; மற்றும் அவர்களது பெயரும் அட்டையில் உள்ளது போல இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் பயனர்களுக்கு கிட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.