மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் வீடியோ அழைப்பு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இரண்டு புதிய அம்சங்கள் அறிமுகமாகியுள்ளது. ஒன்று, குறைந்த ஒளி நிலைகளில் வீடியோ அழைப்புகளின் தரத்தை அதிகரிக்கும் குறைந்த ஒளி பயன்முறை. இரண்டாவது, அரட்டைகளை தனிப்பயனாக்க அனுமதிக்கும் தீம்கள்.
வீடியோ அழைப்பின் போது திரையில் தோன்றும் பல்ப் ஐகானைத் தட்டுவதன் மூலம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் குறைந்த ஒளி பயன்முறையை எளிதாக இயக்கலாம். இது குறைந்த ஒளியில் எடுக்கப்படும் வீடியோக்களின் தரத்தை மேம்படுத்தி, தெளிவான படத்தை வழங்கும். இணைய பயன்பாட்டில் இந்த அம்சம் தற்போது கிடைக்கவில்லை. அதேபோல், Android (பதிப்பு 2.24.21.34) மற்றும் iOS (பதிப்பு 24.20.71) ஆகியவற்றில் பீட்டா பயனர்களை தேர்ந்தெடுத்து, வாட்ஸ்அப் 22 வெவ்வேறு தீம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தீமும் 20 வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது. பயனர்கள் தங்கள் விருப்பப்படி தீம்களை தேர்ந்தெடுத்து, அனைத்து அரட்டைகளுக்கும் அல்லது குறிப்பிட்ட அரட்டைகளுக்கும் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தீம்கள் பயனரின் திரையில் மட்டுமே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.