கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ‘மெட்டா’ என்று மாற்றப்பட்டது. மேலும், நிறுவனத்தின் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ‘மெட்டாவர்ஸ்’ என்று அதற்கு பெயரிடப்பட்டிருந்தது. அதில் தொடங்கி, நிறுவனத்தில் பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்பட்டன. அதற்காக, பல பில்லியன் டாலர்கள் பணம் செலவிடப்பட்டது. ஆனால், கடந்த வருடத்தில் உலகப் பொருளாதாரம் சரிவடைந்து, பணவீக்கம் அதிகரித்ததால், மெட்டா நிறுவனத்தின் லாபமும் சரிவை சந்தித்துள்ளது. மேலும், மெட்டாவெர்ஸ் ஒருங்கிணைப்புக்காக நிறுவனத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், குறைக்கப்பட்ட சமூக ஊடக விளம்பரங்கள் ஆகியவையும் லாபக் குறைவுக்கு காரணமாக கூறப்படுகின்றன.
முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில், முதன் முதலாக, மெட்டா நிறுவனத்தின் விற்பனை சரிவு பதிவானது. நிறுவனத்தின் பங்குகள் 60% குறைந்தன. தற்போது, மெட்டா நிறுவனம், தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாயில் 4% சரிவு பதிவாகியுள்ளது. முந்தைய காலாண்டில் 29 பில்லியன் டாலர்களாக இருந்த நிறுவனத்தின் வருவாய், தற்போது 27.7 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. நிகர வருவாய் முந்தைய ஆண்டை விட 52% குறைந்து, 4.4 பில்லியன் ஆக உள்ளது. அதே வேளையில், நிறுவனத்திற்கான செலவுகள் 19% அதிகரித்துள்ளன.
‘மெட்டாவர்ஸ்’ ஒருங்கிணைப்புக்காக, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்டடு ரியாலிட்டி தொழில்நுட்பங்களில் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. அதற்காக, முந்தைய ஆண்டு 2.6 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 3.7 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக ஏற்படும் இழப்பு கணிசமாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 30 பில்லியன் முதல் 32.5 பில்லியன் டாலர்கள் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரலாற்று சரிவு குறித்து நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டெட் ரியாலிட்டி போன்ற புதிய தொழில்நுட்ப பாதையில் நிறுவனம் பயணிக்க தொடங்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்றிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவனத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். அன்று புதிய தொழில்நுட்பத்துக்கு கொடுத்த அதே வரவேற்பை, முக்கியத்துவத்தை தற்போதும் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும், அனைத்து சவால்களையும் மீறி மெட்டா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 4% அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.