அடுத்த மாதம் முதல் அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்தம் கட்டாயம்; கண்காணிப்பு செயலி மூலம் நடைபெறும்.
சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இனிமேல் வளர்ப்பு நாய்களின் உடலில் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயமாகிறது. கடந்த ஜனவரி மாதம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கம் முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் முதல் நடைமுறை அமலுக்கு வருகிறது. இதற்காக 2 லட்சம் மைக்ரோ சிப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனைகளுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும். வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது மைக்ரோ சிப் பொருத்தப்படவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். விதிமுறைகளை மீறினால் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணித்து வருவதாகவும், 1.80 லட்சம் தெருநாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














