மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் ட்விட்டரில், பிரதமர் நரேந்திர மோடியுடன் நுட்பமான உரையாடல் நிகழ்ந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும், “டிஜிட்டல் மயமாக்கல் வழியாக தற்சார்பு இந்தியா மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய இந்தியாவை உருவாக்கும் திட்டத்தில் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த வழியில் இந்தியா உலகத்திற்கே வெளிச்சத்தை தருவதாக திகழ்வது மிகவும் ஊக்கமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
சத்யா நாதெள்ளா, செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவிற்கு வருகை தந்தார். அவர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து, டிஜிட்டல் துறையில் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை குறித்து விவாதித்தார். முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று, மும்பையில் மைக்ரோசாப்ட்டின் எதிர்கால தலைமை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அதில் கிளவுட் சர்வீசஸ் தொடர்பான திட்டங்கள் குறித்து அவர் பேசியது கவனம் பெற்றது.