உலகளாவிய முறையில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தனது 5% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கிட்டத்தட்ட 11000 எண்ணிக்கையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மனித வளத்துறை மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவில் 122000 பணியாளர்களும், வெளிநாடுகளில் 99000 ஊழியர்களும் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், "மைக்ரோசாப்ட் நிறுவனம் பொருளாதார மந்த நிலை எதிர்ப்பதற்கு முழுமையான திறனுடன் இல்லை. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் நிறுவனத்திற்கு மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று கூறியிருந்தார். அவரது இந்த எச்சரிக்கைக்கு பின், தற்போது பணி நீக்கம் குறித்த தகவல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.














