செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக MAVEN என்ற விண்கலத்தை நாசா செலுத்தியுள்ளது. இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் புற ஊதா புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தில் உள்ள வெள்ளை நிற மேகங்கள் மற்றும் பல கிரேட்டர்கள், பள்ளத்தாக்குகள் ஆகியவை காணப்படுகின்றன. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நாசா, "முற்றிலும் புதிதானதொரு வெளிச்சத்தில், நிறத்தில் செவ்வாய் கிரகம்" என்று பதிவிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2013 நவம்பரில் விண்ணில் செலுத்தப்பட்ட MAVEN விண்கலம், செப்டம்பர் 2014 ல் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது. இது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை குறித்து ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும். இந்த விண்கலத்தில் IUVS என்ற பிரத்தியேக கருவி உள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இந்த கருவி மூலம் எடுத்த புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தின் புற ஊதா கதிர்கள் தென்படுகின்றன. எனவே, இந்த கருவி மூலம் எடுத்த புகைப்படத்தில் செவ்வாய் கிரகம் ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது.