கனடாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள், கால்நடை வளர்ப்பு குறித்து ஆய்வு செய்ய வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கனடாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், துறை செயலர் சமயமூர்த்தி, தோட்டக்கலை துறை இயக்குனர் பிருந்தா தேவி, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் அரச முறை பயணமாக ஜூலை 30ஆம் தேதி கனடாவிற்கு பயணம் சென்றனர். இவர்கள் அங்குள்ள மேஜர் கில் பூங்காவை பார்வையிட்டு பூங்காவின் அமைப்பு, மரங்கள், செடிகள், பிரதான சின்னங்கள் பற்றிய விவரங்கள், பராமரிக்க பயன்படுத்தும் இயந்திரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பின் ஜூலை 31 ஆம் தேதி இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவை இந்திய தூதரகத்திற்கு சென்று சந்தித்தார். அங்கு கனடாவின் விவசாய வளங்கள், பயன்படுத்தும் முறைகள், வேளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள், அறுவடைக்குப் பிறகு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி ஆகியவை குறித்து விசாரித்தார். மேலும் சோயா, மொச்சை, மக்காச்சோளம், கோதுமை, ஓட்ஸ் பயிர்கள்,பழவகைகள் போன்றவை பயிரிடுவதை ஒட்டாவில் கார்சொனாபி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார். அதேபோல் வேளாண் அருங்காட்சியகம், கால்நடை வளர்ப்பு மையம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.