நேற்றைய தினம், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இல்லங்கள் மற்றும் இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இறுதியில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிசோதனை செய்திருந்தனர். தற்போது, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி, இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக, காவேரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும், அவரது கைது நடவடிக்கை தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.