மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பாலைவனப் பகுதியில், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதிரியக்கப் பொருள், போக்குவரத்தின் போது தொலைந்ததாக சொல்லப்பட்டது. அது தற்போது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூமெனில் உள்ள சுரங்கத்திலிருந்து பெர்த் நகரத்துக்கு வந்த லாரியில் இருந்து, கதிரியக்கப் பொருள் தொலைந்தது. ஒரு மாத்திரை அளவு மட்டுமே இருக்கும் இந்தப் பொருள், தோல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்தக் கூடிய அபாயம் நிறைந்ததாக சொல்லப்பட்டது. எனவே, பிரத்தியேகமாக தேடுதல் குழு அமைக்கப்பட்டு, 6 நாட்கள் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. கதிரியக்கத்தை கண்டறியும் டிடக்டர்கள் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. லாரி பயணித்த பாதை மற்றும் நின்று சென்ற இடங்களை ஜிபிஎஸ் தரவுகள் கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து, கதிரியக்கப் பொருளை கண்டுபிடித்துள்ளனர்.














