ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நாளை மும்பை தாதரிலுள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்ய பூமியில் நிறைவு பெறுகிறது.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரை - யை தொடங்கினார். இந்த யாத்திரை நேற்று 4வது நாளாக மராட்டியத்தில் நடைபெற்றது. இன்று ராகுல் காந்தியின் யாத்திரை தானே மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நாளை மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் நினைவிடம் சைத்ய பூமியில் யாத்திரை நாளை நிறைவு பெறுகிறது. பின்னர் அங்கு மும்பை சிவாஜி பார்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். மேலும் இந்தியா கூட்டணியின் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இவ்விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை விமானம் மூலம் மும்பை செல்ல உள்ளார். பின்னர் அங்கு நடைபெறவுள்ள ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்வதுடன் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார்.