சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய மொபைல் இயங்குதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
தற்போது மொபைல்போன்கள் 'கூகுள்' நிறுவனத்தின் 'ஆண்ட்ராய்டு' அல்லது 'ஆப்பிள்' நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்., என்ற 'ஆப்பரேட்டிங் சிஸ்டம்' எனப்படும் இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. உள்நாட்டில் இதுபோன்ற மொபைல்போன் இயங்குதள தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சி நடந்து வந்தது. பரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தை, மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பரிசோதனை செய்தனர்.
இது குறித்து அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் கூறுகையில், மொபைல்போன் இயங்குதளத்தை உருவாக்கியுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடுகளில் நாமும் இடம்பெற்றுள்ளோம். இது மிகவும் கடினமான பயணம்; அதே நேரத்தில் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளது. நம்முடைய இந்தப் பயணம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக பலர் போராடினர். இதையெல்லாம் மீறி, இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.